புதிய இலாக்கா ஒதுக்கப்பட்ட அமைச்சர் கிளாம்பாக்கத்தில் ஆய்வு..!

புதிய இலாக்கா ஒதுக்கப்பட்ட அமைச்சர் கிளாம்பாக்கத்தில் ஆய்வு..!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

சென்னை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிறுத்த கட்டுமான பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பணிகளை உயர்தரத்தோடு விரைவில் செய்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. மாநகரப் பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் என மொத்தம் 285 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி இருக்கிறது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு

 புதிய பேருந்து நிறுத்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு  கூறியதாவது, பேருந்து நிறுத்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது, பல்வேறு புதிய அம்சங்களை இந்த கட்டமைப்பில் உள்ளடக்க உள்ளதால் எப்போது திறக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையம்

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நிலையத்தை விரிவு படுத்துவதற்கான கோரிக்கை மெட்ரோ நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும், புயல் மழை வெள்ள பாதிப்பினால் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சேகர்பாபுவுக்கு கூடுதல் இலாக்கா

ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வரலக்ஷ்மி, முதன்மை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்து அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு நேற்று கூடுதல் பொறுப்பாக பெருநகர வளர்ச்சி குழுமம் இலாக்கா ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது