மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் பலி...

மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் பலி...

மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை மகன் பிடித்து கீழே தள்ளியதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

திருவள்ளூர் | பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான சீனிவாசன் 70. இவர் கடந்த 17ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவு தமது மனைவி கஸ்தூரியுடன் சீனிவாசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

குடித்துவிட்டு வந்து தாயுடன் தந்தை தகராறில் ஈடுபடுவதை பார்த்த மகன் ராஜேஷ் அப்போது தடுத்துள்ளார். தாய் கஸ்தூரி, மகன் ராஜேஷ் இருவரிடமும் சீனிவாசன் மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக ராஜேஷ் சீனிவாசனை பிடித்து தள்ளியுள்ளார்.

இதில் கீழே விழுந்த ஸ்ரீனிவாசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் ஐபிசி 304 (2) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து மகன் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயிடம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் பிடித்துக் கீழே தள்ளியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com