சூறாவளி காற்றுடன் கனமழை... 3,000 ஏக்கர் பயிர்கள் சேதம்...
பழனி அருகே சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் | பழனி பகுதியில் கடந்த 16ம்தேதி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. பழனியருகே உள்ள காவலப்பட்டி, பாப்பம்பட்டி, சித்தரேவு மற்றும் குதிரையாறு அணை ஆகிய பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றுகாரணமாக அப்பகுதி விவசாய நிலங்களிலான 3000 ஏக்கர் அளவிலான உள்ள வாழைமரங்கள் மற்றும் மக்காச்சோளம், நெல்மணிகள், கரும்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்தன.
ஒருசில இடங்களில் தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் விளைந்திருந்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கி நாசமானது. இதுதவிர சில வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் சுற்றுச்சுவர்களும் சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த வாழை, மக்காச்சோளம், நெற்பயிர்கள் ஆகியவை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.எனவே சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | கொட்டி தீர்த்த மழை... மகிழ்ச்சியில் மக்கள்...!!!