வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...

பரமக்குடி அருகே விலையை குறைத்து கேட்பதால் மிளகாய் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...

சிண்டிகேட் அமைத்து வியாபாரிகள் மிளகாய் விலையை குறைத்து கேட்பதால் விவசாயிகள் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தில் செயல்படும் மிளகாய் வணிக வளாகத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் குண்டு மிளகாய்களை கொண்டு வந்துள்ளனர். கடந்த வாரம் திங்கள் கிழமை ஒரு கிலோ குண்டு மிளகாய் அதிகபட்சமாக 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மார்ச் -2ல் கன்னியாகுமரி முதல் பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் காரணம் ?

இன்று ஒரு கிலோ மிளகாய் அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது. வணிக வளாகத்தில் உள்ள 65 கடை வியாபாரிகளும் சிண்டிகேட் அமைத்து ஒரே மாதிரியாக மிளகாய்க்கு விலை நிர்ணயித்துள்ளனர். மேலும் ஒரு கிலோ மிளகாய்க்கு 8 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்.

சாக்கு பைக்கு இரண்டு கிலோ வரை எடையில் கழிப்பதால் மிளகாய் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து அடிமாட்டு விலைக்கு மிளகாயை கேட்பதால் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ முற்றுகை போராட்டம்

இதனால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரமக்குடி டிஎஸ்பி காந்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வியாபாரிகள், அதிகாரிகளிடம் பேசி மிளகாய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை எடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிளகாய்க்கு விலை நிர்ணயிப்பதால் மிளகாய் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு குண்டு மிளகாயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க | சிசோடியா கைதில் அரசியல் ஆதாயம் தேடும் ஆம் ஆத்மி...?!!