குற்றாலம் : உடை மாற்றும் அறை இடிந்து விழுந்து சேதம்...! மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த சுற்றுலா பயணிகள்...!

குற்றாலம் : உடை மாற்றும் அறை இடிந்து விழுந்து சேதம்...! மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த சுற்றுலா பயணிகள்...!

தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாட்டவர் என பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கரையில் அமைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறை கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் அந்த கட்டிடம் முழுமையாக இடிந்து சேதம் அடைந்தது.

அந்த கட்டிடம் சேதம் அடைந்து ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது அருவியில் குளிக்கும் பெண்கள் உடைகளை மாற்ற முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடும்பத்தினருடன் வரும் பெண்கள் சேலையை சுற்றி பாதுகாப்பாக மறைவை ஏற்படுத்தி உடை மாற்றும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

குற்றாலம் மெயின் அருவியில் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வரும் பெண்களின் துயரத்தை போக்க மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் பெண்கள் உடை மாற்றும் அறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.