புதிய கட்டிடம் கட்டித்தர கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்...! கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர்...!

புதிய கட்டிடம் கட்டித்தர கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்...! கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர்...!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த எட்டு ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக துவங்க வேண்டும் எனவும் நன்னிலம் தொகுதியில் உள்ள கல்லூரிக்கு திருவாரூர் தொகுதியில் உள்ள செல்லூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், குடவாசலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றசாட்டியுள்ளனர். மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தை மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று மனு அளித்தனர். அதனை தொடர்ந்து இன்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நன்னிலம் அதிமுக சட்ட மன்ற உறுப்பினரும் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து மாணவ மாணவிகளோடு தரையில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் குடவாசலில் இருந்து வேறு இடத்திற்கு கல்லூரியை எடுத்துச் செல்வது நியாயத்திற்கு புறம்பானது, குடவாசலிலே கல்லூரி அமைய பெற வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அப்படி தேவைப்பட்டால் மாணவர்களை சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்று மாணவ மாணவிகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய போது அந்தப் பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயிர்க்கல்வி அமைச்சர் கூறியிருந்தார். இன்றைக்கு வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என கூறினார்.