கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட, ஜங்ஷன் சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணியில், கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்வதற்காக, வடிகால் வாய்க்காலுக்காக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
வடிகால் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளம், கடந்த 50 நாட்களுக்கு மேலாக, எவ்வித பணியும் மேற்கொள்ளாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்படுவதாகவும், முழுமை அடையாத வடிகால் வாய்க்காலால், கழிவுநீர் செல்ல முடியாமல் முற்றிலுமாக தேங்கி துர்நாற்றம் வீசுவதால், தொற்றுப் பரவும் அபாயம் ஏற்படுவதாக வர்த்தக சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், வடிகால் வாய்க்கால் பணியினை மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறி, வர்த்தக சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பழனியிடம் புகார் மனு அளித்தனர். மேலும் வடிகால் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதி அளித்துள்ளார்.