தொட்டாலே பெயர்ந்து விழும் தடுப்பணை...! 2 ஆண்டுகளில் சேதமடைந்த அவலம்...!

ஆண்டிப்பட்டி அருகே மண்ணால் கட்டப்பட்ட தடுப்பணை தொட்டாலே இடிந்து விழும் அவலம்

தொட்டாலே பெயர்ந்து விழும் தடுப்பணை...! 2 ஆண்டுகளில் சேதமடைந்த அவலம்...!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை-மயிலை ஒன்றியம், பொன்னன்படுகை ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள அரண்மனைத்தேரி என்ற ஓடையின் குறுக்கே 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு தடுப்பணை கடந்த 2020ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஓடையின் வழியாக பல ஆண்டுகளாக தண்ணீர் வராத நிலையில், கடந்த மாதம் பெய்த மழையினால் லேசான நீர்வரத்து இருந்துள்ளது. இதில் கடந்த 2020ம் ஆண்டு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை அடியோடு சேதமடைந்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த தடுப்பணையை தொட்டு பார்த்த போது கட்டிடம் இடிந்து விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் தடுப்பணையின் சிமென்ட் பூச்சுகள் அப்படியே பெயர்ந்து விழுந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பணையை தொட்டு பார்த்தாலே மண்கலவை உதிர்ந்து விழுகிறது. பின்னர் ஆராய்ந்த போது தடுப்பணை கட்டிடத்தை சிமென்ட் வைத்து கட்டாமல், மண்ணால் கட்டப்பட்டுள்ளதை கண்டு விவசாயிகளும் பொதுகமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடிநீரை பெருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசு செயல்படுத்திய தடுப்பணைத் திட்டம் இப்பகுதியில் முறைகேடாக செயல்படுத்துப்பட்டுள்ளதாகவும், அரசு வழங்கிய நிதி வீணாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும் எந்த ஒரு அரசு கட்டிடத்திற்கும் 15 ஆண்டுகள் ஆயுள் என்று  நிர்ணயித்துள்ள நிலையில், இந்த தடுப்பணை 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்துள்ளது. மண்ணால் கட்டப்பட்ட தடுப்பணை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என்றும், முறைகேடாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.