உஷார்..! வங்கி ஊழியரின் மோசடி...! வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி...?

உஷார்..! வங்கி ஊழியரின் மோசடி...! வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி...?

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று அதன் மூலம் வங்கியில் லட்ச கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் சாலிகிராமத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது போலவும், அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருப்பதால் அதை செலுத்த வேண்டும் எனவும் வங்கி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லாத நிலையில், தன் பெயரில் வங்கிக் கடன் பெற்று இருப்பதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னரசு இதுகுறித்து வங்கிக்குச் சென்று முறையிட்டார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், கிரெடிட் கார்டு பெற்ற கணக்கிற்கு கொடுக்கப்பட்டிருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியைத் தேடத் தொடங்கினர். அதனடிப்படையில் சைதாப்பேட்டை வி.ஜி.பி சாலையைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை பார்த்து வருவதும், அதற்கு முன் சாலிகிராமத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிளையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. 

மேலும், அந்த நபர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பணிபுரிந்தபோது, தனக்கு கிடைத்த சிம்கார்டு ஒன்றை வைத்து அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த தென்னரசு என்பவரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்றதும், பின் அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இதே போல் மேலும் சில வங்கி வாடிக்கையாளர் பெயரிலும் அபூபக்கர் கிரெடிட் கார்டு பெற்று பண மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கி ஊழியரான அபூபக்கர் சித்திக் மீது பண மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அபூபக்கர் சித்திக் இன்னும் எத்தனை வாடிக்கையாளர்களின் பெயரில் இதேபோன்று கிரெடிட் கார்டு பெற்று பண மோசடி செய்துள்ளார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் மூலம் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்றிதழை இந்த தேதிக்குள் சமர்பிக்க அறிவுறுத்தல்...!