தூக்கு தண்டனையில் இருந்து தப்ப பலே நாடகம்..! அலேக்காக தூக்கிய காவல்துறை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 வயது சிறுமியை கொலை செய்த ஒருவர், தண்டனைக்கு பயந்து இறந்து போனதாய் நாடகமாடியுள்ளார். சினிமா பாணியில் அரங்கேற்றிய தூக்குதண்டனை கைதி சிக்கியது எப்படி?
சிறுமி கொலை:
திருவண்ணாமலையை அடுத்த மேல்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன், கடந்த 2014-ம் ஆண்டு ஐந்தாவது படித்து வந்த ஒரு சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
தண்டனையும் ஜாமினும்:
இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. சிறைக்கு சென்ற 6 மாதத்திலேயே மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்தார் மணிகண்டன்.
பலே திட்டம்:
இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், தண்டனையிலிருந்து தப்ப எண்ணிய மணிகண்டன், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாபநாசம் பட பாணியில் வித்தியாசமான திட்டமொன்றைத் தீட்டியுள்ளர்.
இறந்ததாக நாடகம்:
அதன்படி, கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பி மங்களத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். பின்பு, தனது உடலில் இருந்து 300 மில்லி ரத்தத்தை ஒரு காலி கேனில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பாலானந்தல் சென்றுள்ளார். போகும் வழியில், வாகனத்தை சாலையில் கிடத்தி, தனது வாட்ச், பர்ஸ் ஆகியவற்றை போட்டு விட்டு அதன் மீது ரத்தத்தை ஊற்றிவிட்டு, தப்பிவிட்டார் மணிகணடன்.
சந்தேகம்:
மறுநாள் இந்த சம்பவத்தை அறிந்து காவல்துறையினர் விசாரித்த போது, இருசக்கர வாகனத்தில் சென்றது தனது கணவர்தான் என மணிகண்டனின் மனைவி ஷர்மிளாவும் உறுதியளித்துள்ளார். இவ்விவகாரத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
அதிரடி கைது:
அப்போது, இறந்ததாக கூறப்பட்ட மணிகண்டன் ஆரணியில் உள்ள உறவினர்கள் வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆரணி விரைந்த காவல்துறையினர் தண்டனைக்கு பயந்து பதுங்கியிருந்த மணிகண்டன் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த உறவினர்கள் சரத்குமார், சத்யராஜ், பாண்டியராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி கொலை வழக்கில் தூக்குதண்டனை பெற்ற ஒருவர் தான் இறந்து போனதாய் நம்ப வைத்தால் அப்படியே விட்டு விடுவார்கள். வேறொரு ஊரில் நிம்மதியாக வாழலாம் என்றே இப்படியான கிரிமினல் திட்டத்தை தீட்டியிருக்கிறார். ஒரு கிரிமினலே இப்படி திட்டம் போட்டால், எத்தனையோ கிரிமினல்களை அலேக்காக தூக்கிய காவல்துறையினர்ன் சாமர்த்தியம் எப்படிப்பட்டது என்பதை மணிகண்டன் அறிந்திருக்க இல்லை போலும்..