நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள்... தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளை வெட்டிக்கொன்று தப்பியோட்டம்.. போலீஸ் விசாரணை!!

நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள்... தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளை வெட்டிக்கொன்று  தப்பியோட்டம்.. போலீஸ் விசாரணை!!

மதுரை மாவட்டம் மேலூரில், தூங்கிக்கொண்டிருந்த தாய், மகள் ஆகியோரை நள்ளிரவு மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலூர் பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருக்கு மனைவி நீலா தேவி மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.  கூலித்தொழிலாளியான இவர், நேற்றிரவு வேலைக்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் தனித்து இருந்த தாய் மற்றும் மகள் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர். ஆனால் நள்ளிரவு கதவை உடைத்துக்கொண்டு வீடு புகுந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால், நீலா தேவி மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சடலங்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் கொலை குறித்து வழக்கு பதிந்த போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா, நீலா தேவியின் கணவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.