பிறந்த தேதி உங்கள் பாஸ்வேர்டா..! கவனம்..!

பிறந்த தேதி உங்கள் பாஸ்வேர்டா..! கவனம்..!

கோயம்பேட்டில் மணி பர்சை தொலைத்த பெண்ணின் ஏடி.எம் கார்டிலிருந்து 50 ஆயிரம் சுருட்டிய கொள்ளை.

தொலைந்த மணி பர்ஸ்:

திருவண்ணாமலை மாவட்டம் ஓடலூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ரேவதி, நேற்று மதியம் 2 மணிக்கு வண்ணாரப் பேட்டையில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் விருகம்பாக்கத்தில் உள்ள மற்றொரு உறவினரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆட்டோவுக்கு பணம் கொடுப்பதற்காக தனது பேக்கில் வைத்திருந்த மணி பர்சை பார்த்த போது காணாமல் போயுள்ளது. 

பணம் கொள்ளை:

சிறிது நேரத்தில், ஐந்து தவணைகளில் 50,000 ரூபாய் ஏடி.எம்மில் இருந்து பணம் எடுத்ததாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: தெரியாமல் செய்து விட்டேன்..! பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமின் !

புகார்:

காணாமல் போன பணம் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் அண்ணா நகர் சைபர் கிரைம் காவல்துறையின் விசாரணைக்கு மாற்றினர்.

சந்தேகம்:

இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காணாமல் போன பெண்ணின் பர்சில், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததால் ஏடிஎம் கார்டு எடுத்த நபர் அவரின் பிறந்த தேதியை எதார்த்தமாக பதிவு செய்து ஏடிஎம்மில் இருந்து பணத்தை திருடி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சியை வைத்து திருடிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை:

பிறந்த தேதி, வாகனத்தின் எண், செல்போனின் கடைசி நான்கு எண்கள், முதல் நான்கு எண்கள் போன்ற எளிதாக பொதுவெளியில் தெரியும் எண்களை ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கடவுச் சொற்களாக வைக்க வேண்டாம் என பொது மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.