வீராங்கனைகளை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த பயிற்சியாளர்...    ஆடியோ,வாட்ஸ்ஆப் ஆதாரங்களோடு இளம் பெண் குற்றச்சாட்டு!!

பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பயிற்சியாளர் மீதும் சமூக வலைதளத்தில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீராங்கனைகளை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த பயிற்சியாளர்...    ஆடியோ,வாட்ஸ்ஆப் ஆதாரங்களோடு இளம் பெண் குற்றச்சாட்டு!!
சென்னையிலுள்ள யூனிவர்சல் ஸ்போட்ஸ் ஃபௌண்டேஷன் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் ராஜசேகரன் மீது முன்னாள் வீராங்கனை சமூக வலைதளத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
 
தமிழ்நாடு தடகள சங்கத்தின் கீழ் பல்வேறு பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் யூனிவர்சல் ஸ்போட்ஸ் ஃபௌண்டேஷன் என்ற பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக ராஜசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் பெயர் கூற விரும்பாத முன்னாள் தடகள வீராங்கனை ஒருவர் தடகள பயிற்சியாளர் ராஜசேகரால் பல்வேறு பயிற்சி வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதில் தானும் ஒருவர் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
தடகளப் பயிற்சியாளர் சொந்த ஊர்களை விட்டு பயிற்சிக்காக தன்னிடம் வரும் வீராங்கனைகளை தனக்கு எல்லா வகையிலும் இணங்கி நடக்க வற்புறுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும், அதை வெளியில் சொன்னால் எதிர்காலத்தை அழித்து விடுவேன் என மிரட்டி வருவதாகவும் பரபரப்பு தகவல்களை பதிவிட்டுள்ளார். விடுமுறை நாளன்று பயிற்சிக்கு வரச்சொல்லி ராஜசேகரும் தானும் தனியாக இருந்த நேரம் பார்த்து தன்னிடமும் தவறாக நடந்துகொண்டதாகவும், தான் ஒத்துழைப்பு வழங்காததால் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பிற வீரர் வீராங்கனைகள் மற்றும் அவரின் பெற்றோர்களிடம் கூறி தன்மீது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.

 
மேலும், தன்னைப்போல்  பிற வீராங்கனைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தகவலை பதிவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தனக்கு பயிற்சியாளர் ராஜசேகர் பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி, ஆடியோ பதிவு போன்ற ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அந்த முன்னாள் வீராங்கனை தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தடகள பயிற்சியாளர் ராஜசேகரன் மீது வந்த அதிகப்படியான புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு தடகள சங்கம் பயிற்சியாளர் ராஜசேகரை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டதோடு அவரின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதன் அடிப்படையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர் பயிற்சியாளராக தொடர 2 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. சமீபத்தில் முன்னாள் வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பூக்கடை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தடகள பயிற்சியாளர் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.