வங்கி கொள்ளையில் ஈடுபட்ட... 5 பேர் மீதான குண்டர் சட்டம்  ரத்து...!!

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட... 5 பேர் மீதான குண்டர் சட்டம்  ரத்து...!!

தனியார் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவன கிளையில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் ரூ.11 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.

 இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இதே வங்கியின் மற்றொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் தன்னுடையை நண்பர்களுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ்குமார், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், பாலாஜி, சக்திவேல், சூர்யா, செந்தில்குமார் மற்றும் கோவையைச் சேர்ந்த நகைப் பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  

பின்னர் இந்த வழக்கில் முருகன், பாலாஜி, சந்தோஷ்குமார், சூர்யா, செந்தில்குமார், ஸ்ரீவத்சன் ஆகியோர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே பாலாஜி மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் எஞ்சிய முருகன், சந்தோஷ்குமார் உள்பட 5 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கும் முன்பாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை காவல்துறை முறையாக கடைபிடிக்கவில்லை என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.