மாற்று மதத்தவரை காதலித்ததால் ஆத்திரம்... மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!

கேரளாவில் காதலில் விழுந்த 14 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் கொடூர தந்தை ஒருவர்.

கேரள மாநிலம் ஆலுவா அருகே ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது. 43 வயதான இவர் கொச்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பாத்திமா என்ற மகள் ஒருவர் இருந்தார். 

14 வயது சிறுமியான பாத்திமா, கருமாலூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், மாற்று மதத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தைக்கு தெரியாமல் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இதனை அறிந்த அபீஸ் முகமது, மகளை கண்டித்ததுடன், கடுமையாக தாக்கியிருக்கிறார். 

இதையடுத்து சில நாட்கள் அமைதியாக இருந்த சிறுமி பாத்திமா, தந்தைக்கு தெரியாமல் நண்பரின் போனில் இருந்து திருட்டுத் தனமாக காதலனுக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.  

இதைக் கேள்விப்பட்டு வெகுண்டெழுந்த அபீஸ் முகமது, கடந்த 29-ம் தேதியன்று சிறுமியை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். உடல் முழுக்க காயத்தோடு சிறுமி போராடிக் கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்தவர், பூச்சி மருந்தை வற்புறுத்தி குடிக்க வைத்தார். 

இதையடுத்து சிறிது நிமிடத்திலேயே மயங்கி விழுந்த சிறுமி இறந்து போனதாக நினைத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து காப்பாற்றினர். 

அப்போது மருத்துவர்களிடம், தந்தை தனக்கு விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் பாத்திமா. ஆனால் 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, 7-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலுவா போலீசார் சிறுமியின் சாவுக்கு காரணமான அபீஸ் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.