சிவனேன்னு இருந்த மூவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிப்போன போதை ஆசாமி கைது!

சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த 3 பேரை கஞ்சா போதையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிவனேன்னு இருந்த மூவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிப்போன போதை ஆசாமி கைது!
Published on
Updated on
1 min read

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்ற மற்றும் பேசிக்கொண்டிருந்த 3 பேரை தலையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் ராயபேட்டையிலுள்ள 3 வெவ்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இருந்த 3 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்கள் மூவரும் புறநோயாளிகளாக வெட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

போலீசாரின் விசாரணையில் வெட்டப்பட்ட 3 பேரும் ராயப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் (34), விக்னேஷ் (19) மற்றும் சரவணன் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் புகாரைப் பெற்ற ராயப்பேட்டை போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்து மூன்று பேரையும் வெட்டிவிட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (எ) முதலை கார்த்திக் (27) என்பதும், இவன் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டபோது கஞ்சா போதையில் தான் சாலையில் எதிரே தென்பட்டவர்களை வெட்டியதாக வாக்குமூலம் அளித்தான். பின்னர் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com