சென்னை: கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சதீஷ், அதே பகுதியில் வசித்து வந்த 20 வயதான சத்யா என்ற பெண்ணை பல நாட்களாக காதலித்திருக்கிறார்.
அந்த பெண், சென்னையில் தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (Bachelor of Commerce) படித்து வரும் நிலையில், தினமும் ரயிலில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். சத்யாவும் சதீசும் இரு தரப்பிலும் காதலித்து வந்ததாகவும், பின்னாளில் சத்யா தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சதீஷிடம் அதிகமாக பேச்சுவார்த்தை இல்லாமல், தன் படிப்பு மீது மட்டும் கவனம் செலுத்தி வந்ததை சதீஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சத்யாவின் மீதான காதலை மறக்க முடியாத சதீஷ் தொடர்ந்து அப்பெண்ணை தொல்லை செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று, சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யாவுடன் பேசி சமாதானம் செய்ய முயன்றும், அதற்கு அவர் உடன்படாததையடுத்து கோபத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஆத்திரத்தின் உச்சத்தில், அந்த வழியாக சென்ற மின்சார ரயில் முன் தனது காதலி சத்யாவை தள்ளி விட்டு தப்பியோடினான்.
தண்டவாளத்தில் விழுந்த சத்யா ரயிலில் படு பயங்கரமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில், மின்னல் வேகத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவி சத்யாவின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பியதைத் தொடர்ந்து தப்பியோடி சதீஷை பிடிப்பதற்கு 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு, இதே போல தான், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற பெண்ணை ராம் என்பவர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். பட்டப்பகலில், யார் மீதும் பயமின்றி அவர் வாயை வெட்டிச் சென்ற கொடுர்ர சம்பவம் தொடர்ந்து இது வரை தெரிந்தே பல காதல் தொடர்பான கொலைகள் பல நடந்து வர, என்று தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமோ என்றும், பெண்கள் மீண்டும் அடுப்படிக்கு சென்று விடுவார்களோ என்ற பதட்டமும் மக்கள் மத்தியில் உலவி வருகிறது.