சபரிமலைக்கு சென்று வந்த திருநங்கை மர்மமான முறையில் உயிரிழப்பு!  

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலைக்கு சென்று வந்த திருநங்கை மர்மமான முறையில் உயிரிழப்பு!   

கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக போட்டியிட 28 வயதான திருநங்கை அனன்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் பெற்றது. எனினும் அவர் மனுவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், கொச்சியில் உள்ள வீட்டில் இருந்த திருநங்கை அனன்யாவை அவரது நண்பர்கள் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அனன்யா சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அனன்யா எல்.ஜி.பி.டி பிரிவினர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர். அதுமட்டுமல்லாமல் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து போது சபரிமலைக்கு சென்று வெற்றிகரமாக சாமி தரிசனம் செய்து முடித்து திரும்பி கவனத்தை ஈர்த்தவர். இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட அனன்யா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.