காணாமல் போனதாக கருதப்பட்ட பள்ளி சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது!

காணாமல்போனதாக கருதப்பட்ட 15 வயது சிறுமியை 2 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி காவலாளியையும், சிறுமியிடம் பாலியல் சீண்டலி ஈடுபட்ட மேலும் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனதாக கருதப்பட்ட பள்ளி சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நபருடைய 15வயது மகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனதால் சிறுமியின் தந்தை அவரை தேடி வந்துள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மகளை கீழ்ப்பாக்கம் தாமோதரன் மூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பியதாகவும் பின் மகளைக் காணவில்லை எனவும் அந்த வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் சிறுமி வேலைக்கு வரவில்லை என தெரிந்ததாகவும் கூறி கடந்த 19 ஆம் தேதி கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமி பெரும் மன உளைச்சலில் சித்த பிரம்மை பிடித்ததைப் போல் அதிர்ச்சியில் இருந்ததைக் கண்ட தந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிறுமியை வீட்டிற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி தனது தந்தை சேர்த்து விட்ட வேலையைப் பார்க்கப்பிடிக்காமல் இருந்து வந்ததாகவும், அதனால் கோபித்துக்கொண்டு இதற்கு முன் தாங்கள் குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதி வீட்டருகே இருக்கும் புருஷோத்தமன் ஜனா என்பவரின் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்கு குடியிருந்தபோது தன்னிடம் தந்தை போன்று பழகிவந்த புருஷோத்தமன் ஜனா-விடம் தனது தந்தை வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி வீட்டில் தனியாக தங்க பயமாக இருப்பதால் 2 நாட்கள் இங்கு தங்கிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி அளிக்க அங்கு தங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரின் வீட்டில் தங்கிய தன்னை புருஷோத்தமன் ஜனா 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதனை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதையடுத்து தான் பயந்து அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், புருஷோத்தமன் ஜானா-விற்கு தெரிந்த மேலும் இருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் வங்கி காவலாளி புருஷோத்தமன் ஜனா-வை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் புருஷோத்தமன் ஜனா அளித்த தகவலை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேலும் இருவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்த அருண் குமார் என்பது தெரிய வரவே அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.