போலீசுக்கே தண்ணி காட்டிய திருடர்கள் ; செல்போன் வழிப்பறி ,பொதுமக்கள் உஷார் !!!

போலீசுக்கே தண்ணி காட்டிய திருடர்கள் ; செல்போன் வழிப்பறி ,பொதுமக்கள் உஷார் !!!

சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் வழிப்பறி  :

சென்னை : ரிப்பன் மாளிகை அருகே நடந்து சென்ற 3 பேரிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ரிப்பன் மாளிகை எதிரே இருந்த பெரியமேடு காவல் நிலைய ரோந்து வாகனப் போலீசார் தப்பிச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது வாகனத்தை ஓட்டிய நபர் தப்பிச் சென்றுவிட பின்னால் அமர்ந்து வந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

போலீசார் விசாரணை :

 கைது செய்யப்பட்ட வாலிபரை பெரியமேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த அருண் (எ) இமான்(18) என்பதும், தப்பிச் சென்ற நபர் புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (எ) தவக்களை(21) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் சூளை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு நேற்றிரவு 11.30 மணியளவில் ரிப்பன் மாளிகை அருகே வந்தபோது அவ்வழியாக அரக்கோணம் செல்ல வேண்டி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத்(16),சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக்(20) மற்றும் முகமது முபாரக்(19) ஆகிய 3 பேரின் செல்போனை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துக்கொண்டு தப்ப முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள : "டாக்டர் சீட்டு போச்சா இப்படியா ஏமாறுவீங்க!!!" தாய் மற்றும் மகள் செய்த கூட்டு சதி...

சிசிடிவி காட்சி வெளியீடு :

பாதிக்கப்பட்ட மூவரிடமும் பெரியமேடு போலீசார் புகாரைப் பெற்று செல்போன் வழிப்பறிச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட அருணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடிய சந்தோஷை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற சந்தோஷ் (எ) தவக்களை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும் ,பல்வேறு காவல் நிலையங்களில் அவன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட அருண் (எ) இமான் மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வழிப்பறி கொள்ளையர்கள் சூளை நெடுஞ்சாலை அருகே உள்ள கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை பெரியமேடு போலீசார்  வெளியிட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள :பல கோடி மதிப்பிலான போன்,லேப்டாப்கள் விற்பனை ; மோசடி செய்த கும்பல் கைது...!