என்னது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு இழப்பீடாக 120 கோடி வழங்குகிறாரா இளவரசர்..?

இளவரசர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு இழப்பீடாக 120 கோடி ரூபாய்  வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னது  பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு இழப்பீடாக 120 கோடி வழங்குகிறாரா இளவரசர்..?

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் தான், இளவரசர் ஆண்ட்ரூ. இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தரப்பில்  நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏற்காமல் திட்டவட்டமாக மறுத்து விட்டார் இளவரசர் ஆண்ட்ரூ. மேலும் அவர்,  தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டபோதும், அதை ஏற்க மறுத்த கோர்ட்டு, கடந்த மாதம் தங்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என  அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில், ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த தருணத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு அமைந்துள்ளதால், அதனை சுமுகமான முறையில்  விரைவில் தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர நினைத்த  இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் வழக்கு தொடர்ந்த வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் வழங்குவதற்கு ஆண்ட்ரூ சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பின்னர் சட்டவிதிமுறைகளின்படி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.