கணவனை கொலை செய்து மண்ணில் புதைத்த மனைவி...வேலை செய்வதாக கூறி நாடகமாடி வந்த பொண்டாட்டி சிக்கியது எப்படி?

கணவனை கொலை செய்து மண்ணில் புதைத்த மனைவி...வேலை செய்வதாக கூறி நாடகமாடி வந்த பொண்டாட்டி சிக்கியது எப்படி?

கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு  கேரளாவில் கூலி வேலை செய்து வருவதாக கூறி நாடகமாடி வந்த மனைவியை 11 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன், இவருக்கு லட்சுமி என்ற மகளும் 35 வயதான குணசேகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கூலித்தொழிலாளியான குணசேகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த மகாராஜனின் மகள் ஜெயந்திக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் லட்சுமிக்கு திருமணமாகி காட்டுமன்னார்கோவிலில் வசித்த நிலையில் அவரது கணவர் இறந்தபின்னர் ஊருக்கு திரும்பி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு செந்தாமரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன் மற்றும் அவரது மைத்துனர் சங்கர் ஆகியோர் மீது குவாகம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம்  உத்தரவிட்டது. அப்போது இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதி மன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.

இதையடுத்து லட்சுமி பல இடங்களில் தேடியும் குணசேகரனை தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ முடியாமல் இருந்துள்ளார். 11 ஆண்டுகள் ஆனா நிலையில் குணசேகரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்த ஊர் மக்கள் பேச தொடங்கினர். இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் தேதி லட்சுமி,  எனது அண்ணன் 11 வருடங்களாக காணமால் போயிருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனின் மனைவியிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அதில் கொலை வழக்கு காரணமாக எனது கணவர் கேரளாவில் சில காலம் தலைமறைவாக இருந்தார் என்றும் காவல்துறையினர்  அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்துவிட்டு சென்ற பின்னர் ஊருக்கு திரும்பிய எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தாக கூறினார்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று இரவில் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் தள்ளிவிட்டதில் அவரது தலையில் அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து எனது சகோதரி ஜோதி, தந்தை மகாராஜன் ஆகியோர் உதவியுடன் குணசேகரனின் உடலை வீட்டிற்கு அருகிலேயே குழிதோண்டி புதைத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் சிலரின் ஆலோசனையின்படி, குணசேகரனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து எலும்புகளை எரித்து சாம்பலை ஏரி தண்ணீரில் கரைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து காவல்துறை ஜெயந்தி கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காள் ஜோதி தந்தை மகாராஜன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.