நாட்டுல நிஜமாவே ஜென்டில்மேன் கிச்சாக்கள் இருக்காங்க பா... தி ரியல் லைஃப் ஆக்சன் கிங்

நாட்டுல நிஜமாவே ஜென்டில்மேன் கிச்சாக்கள் இருக்காங்க பா... தி ரியல் லைஃப் ஆக்சன் கிங்

தி ரியல் ஜென்டில்மேன் 

இயக்குநர் சங்கரின் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் நடித்து 90களில் வெளிவந்த திரைப்படம் தான் ஜென்டில்மேன். அதில் கதாநாயகனாக கிச்சா என்ற பெயரில் நடித்த அர்ஜுன் பணக்காரர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து ஏழை மக்களிடம் கொடுப்பார். 


அதே போல, சென்னையில் சாலையோரம் வசித்து வரும் அன்புராஜ் என்பவர், அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் படத்தில் வருவதை போன்று இருப்பவர்களிடம் இருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு உதவி வந்துள்ளார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியர் அதிர்ச்சி

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர்,சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர், வரதராஜன் (வயது-55) இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க: ஒரே டிக்கெட்..! சென்னையில் வரப்போகும் மாற்றம் என்ன?

மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்று விட்டு 4ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது.


தனி ஒருவனாய் களத்தில் 

கொல்லை சம்பவம் குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் வரதராஜன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்த போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.


மாதம் ஒரு வீட்டில் கொள்ளை 

இந்நிலையில் கொள்ளையனின் அங்க அடையாளங்களை கண்டு பார்த்த போது மாதம் ஒரு முறை மட்டுமே ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் அன்புராஜ் என்கின்ற அப்பு (வயது 33) எக்மோர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசித்து வருவது தெரியவந்தது.

அதன் பிறகு குற்றப்பிரிவு போலீசார் எக்மோர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பத்து நாட்களுக்கு மேலாக நோட்டமிட்டு அவனை கைது செய்து பெருங்களத்தூர் பீர்கன்கரணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பெருங்களத்தூரில் மட்டும் கடந்த நான்கு மாதத்தில், மாதம் ஒரு வீடு என நான்கு வீடுகளில்  கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தார்.


ஏழைகளுக்கு உதவிய கொள்ளையன்

கொள்ளையடித்த நகைகளை குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் இருக்கும் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் அவரிடம் இருந்து 11 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றி, அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.