அமைச்சரின் உறவினர்கள் வீட்டில், 5 நாளாக தொடரும் ரெய்டு!

அமைச்சரின் உறவினர்கள் வீட்டில், 5 நாளாக தொடரும் ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் ஐந்தாவது நாளாக பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு வேலைகளின் ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் சோதனை நடத்தி, சீல் வைத்து நோட்டில் ஒட்டப்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீடு, சோடா கம்பெனி உரிமையாளர் வீடு, வையாபுரி நகர் பகுதியில் ஆடிட்டர் அலுவலகம், காந்தி கிராமம் பிரேம்குமார் - சோபனா தம்பதியினர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அரசு பணிகளின் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. 

அதேபோல், தான்தோன்றி மலையில் உள்ள சுரேந்தர் என்பவரின் உணவகம் மற்றும் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5-வது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அலுவலகம் அடங்கியுள்ள துணி நெய்யும் நிறுவனத்திலும் வருமானவரி துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க:ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!