திருட்டு வழக்கில் பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்.. உதவி ஆய்வாளர், 3 பெண் காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்!!

தூத்துக்குடியில் விசாரணை என்ற பெயரில் பெண்ணை துன்புறுத்திய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு வழக்கில் பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்.. உதவி ஆய்வாளர், 3 பெண் காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்!!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது  வீட்டில் கடந்த 4-ம் தேதி 10 பவுன் நகை மாயமானது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்த அவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுமதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த -7ம் தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகிய 3 பேரும் சுமதியை முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் கடந்த 11-ம் தேதி மனு அளித்தார். இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யாமலும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதும் உறுதியானது.

இதையடுத்து  பெண் காவலர்கள் 3 பேர் மற்றும் விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் முத்துமாலை ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்னும் சில காவலர்களின் குணம் மாறவில்லை என்பதையே இது காட்டுவதாக கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் தவறு செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com