ஏரியின் கடையை உடைப்போம்... நில ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்.... எடப்பாடி அருகே பரபரப்பு...

எடப்பாடி அருகே ஏரியை உடைக்க முயற்சிப்பதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஏரியின் கடையை உடைப்போம்... நில ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்.... எடப்பாடி அருகே பரபரப்பு...

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்ததால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  எடப்பாடி பகுதிகளில் பல்வேறு ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே தாதாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மெய்யம்பாளையம் ஈஞ்சனேரிக்கு இரு தினங்களுக்கு முன் தண்ணீர் வந்தடைந்தது.

இந்நிலையில் இன்று ஈஞ்சனேரி  அதன் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. உபரிதண்ணீர் செல்லும் கால்வாய் கரையோரப் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதால் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ஏரியின் கரையை ஜேசிபி இயந்திம் மூலம் உடைக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து  போலீசார் ஈஞ்சனேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நீரோடைகளை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக்கரையை உடைப்பதாக மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இச்சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.