மனைவியை கொன்று விட்டு...நீலிக்கண்ணீர் வடித்த கணவன்...கொடுத்த வாக்குமூலம் என்ன?

மனைவியை கொன்று விட்டு...நீலிக்கண்ணீர் வடித்த கணவன்...கொடுத்த வாக்குமூலம் என்ன?
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்டிய மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சம்பளத்தை கேட்டு தொல்லை செய்ததால் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். வரவு செலவு குறித்து கேட்டதால் கொலையா? என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வரவு செலவு கணக்கால் தகராறு:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன்.. 29 வயதான இவருக்கும், ரெஜினா பானு என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தனர். 

கடந்த 6 மாதங்களாக நாகர்கோவில் புன்னை நகரில் வசித்து வந்த முகமது உசேன், அந்த பகுதியில் உள்ள பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவர் முகமது உசேனுக்கும், மனைவி ரெஜினா பானுவுக்கும் இடையே வரவு செலவு தொடர்பாக அடிக்கடி தகராறு எழுந்து வந்திருக்கிறது. தாராளமாக செலவு செய்து வந்த ரெஜினாவுக்கு தனது கணவன் கஞ்சனாய் இருப்பதால் வெறுப்பு உண்டாகியிருக்கிறது. 

போதைக்கு அடிமையாகிய கணவன்:

பரோட்டா கடையில் வேலை பார்த்து வந்த முகமது உசேன், அவருக்கு வழங்கப்படும் 600 ரூபாய் சம்பளத்தில் 300 ரூபாயை கடன் கொடுத்தவர்களுக்கு அளித்து விட்டு மீதி 300 ரூபாயை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் பாதி சம்பளத்தைப் பார்த்த ரெஜினாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துள்ளது. 

இப்படி கடன்காரனுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தால் என் நிலைமை என்னாவது என கேள்வி கேட்டு அடிக்கடி சண்டையிடுவது ரெஜினாவின் வழக்கமாய் இருந்து வந்துள்ளது. மனைவியின் திட்டுக்களை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு வந்தவருக்கு ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வருவதற்கு முன் மது அருந்தி விட்டு போதையில் வந்துள்ளார். 

தற்கொலை நாடகம்...இறுதியில் கொலையாக மாறியது:

மனைவியின் தொல்லை தாங்க முடியாத முகமது உசேன் அடிக்கடி மதுஅருந்துவதை வாடிக்கையாக்கிக் கொண்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வழக்கம் போல கணவன் - மனைவிக்குள் தகராறு எழுந்தது. இதற்கு மேலும் உன்னிடம் வாழ மாட்டேன் என ஆவேசமடைந்த ரெஜினா, குழந்தைகளின் துணியை எடுத்து தன்னைத்தானே கழுத்தில் சுற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாய் மிரட்டியுள்ளார். 

ஆனால் இதை வேடிக்கை பார்த்த முகமது உசேன், நீயென்ன செய்வது? நானே உன் மூச்சை நிறுத்துகிறேன் என துணியை எடுத்து கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு கட்டிலில் படுக்க வைத்தார். இதையடுத்து குழந்தைகள் அம்மாவை எழுப்பும்போது, அம்மா நெஞ்சு வலியால் உறங்குவதாகவும், காலையில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார். 

கண்ணீர் வடித்து நாடகம்:

மறுநாள் உயிரிழந்து போன ரெஜினாவின் உடலைக் கண்டு அலறித்துடித்து கண்ணீர் விட்டு அழுதார் முகமது உசேன். அய்யோ. என் மனைவி போய்ட்டாளே.. நான் அநாதையாகி விட்டேனே என கண்ணீர் வடித்ததைப் பார்த்து உறவினர்கள் அனைவரும் விம்மினர். ஆனால் ரெஜினாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டனர். இதையடுத்து நீலிக்கண்ணீர் வடித்த முகமது உசேனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகள் வெளியே வந்தது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com