
கர்நாடகாவில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற காதலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தொட்டபல்லாபுரி பகுதியை சேர்ந்தவர் கிரிஷ். அரசு மருத்துவமனையில் கணக்காளராக பணி புரிந்து வந்த இவரும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த பிரபாவதி என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிய நிலையில், பிரபாவதி கிரிசை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனைக்குள்ளான கிரிஷ், பிரபாவதியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிரிஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாவதியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிரபாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிஷ் தாமாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.