காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்...அளித்த வாக்குமூலம் என்ன?

காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்...அளித்த வாக்குமூலம் என்ன?

டெல்லியில் மகளை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலனுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டுமென ஷ்ரத்தாவின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காதல் மலர்ந்தது:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அஃப்தப் அமீன் பூனாவாலா என்ற இளைஞர், மும்பையில் கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.  அப்போது உடன் பணிபுரியும் ஷ்ரத்தா என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்த நிலையில், இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

லிவ் இன் முறையில் வாழ்ந்த காதலர்கள்:

ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, ஷ்ரத்தா - அஃப்தப் இருவரும் டெல்லிக்கு சென்று தனி வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, டெல்லி சென்றதும் ஷ்ரத்தா தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இருப்பினும், சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் இடத்தை கண்டுபிடித்த அந்த பெண்ணின் தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு பார்த்தால், வீடு பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: 17வது ஜி20 உச்சி மாநாட்டில்...உறுதியளித்த பிரதமர் மோடி! 

காதலியை கொன்ற காதலன்:

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, உடனடியாக பெண்ணின் காதலன் அஃப்தப்பை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. காதலித்து வந்தவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா,  பிற பெண்களுடன் காதலன் நெருக்கமாகப் பழகுவது தெரிய வந்ததால் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், தலையணையால் முகத்தை மூடி மூச்சடைக்க வைத்து காதலியை அஃப்தாப் கொலை செய்துள்ளார்.

பிரிட்ஜில் சேமித்து வைத்த உடல்:

இதையடுத்து அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி தனது வீட்டில் உள்ள பிரிட்ஜில்  சேமித்து வைத்து,  டெல்லியில் ஒவ்வொரு பகுதிகளிலும் வீசி எறிந்துள்ளார். டெக்ஸ்டர் என்ற ஆங்கிலத் தொடரைப் பார்த்து இந்தக்கொலையை அரங்கேற்றியதாகவும் அஃப்தப் விசாரணையில்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோரிக்கை வைத்த தந்தை:

பின்னர், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலை தவிர, 10 உடற்பாகங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவத்தை நடித்துக்காட்ட சொல்லி உடலை வீசிய இடங்களுக்கு அஃப்தாபை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பேசிய ஷ்ரத்தாவின் தந்தை, விசாரணை முறையாக நடைபெறுவதோடு அஃப்தாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.