பெற்ற குழந்தையை விற்ற வழக்கில் திடீர் திருப்பம்... இடைத்தரகர் பெண்ணை கைது செய்து விசாரணை...

சென்னை புழல் அருகே பெற்ற குழந்தையை விற்று எடுத்து சென்ற பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகாரளித்த வழக்கில், இடைத்தரகரை கைது செய்துள்ளது காவல்துறை.

பெற்ற குழந்தையை விற்ற வழக்கில் திடீர் திருப்பம்... இடைத்தரகர் பெண்ணை கைது செய்து விசாரணை...

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டாவதாக யாஸ்மீன் கர்ப்பமாக இருந்த போது, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யாஸ்மீன் தனது மூத்த மகளுடன் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் யாஸ்மீனிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றதாக யாஸ்மீன் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், யாஸ்மீன் தனது இரண்டாவது குழந்தையை விற்று பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், பிறந்த குழந்தையை வாங்கி சென்ற நபர்களையும், பணத்தை பறித்து சென்ற நபர்களையும் தேடி வந்தனர். 

குழந்தையை விற்றுகொடுத்த இடைத்தரகரான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா(49) என்பவரை வேப்பேரி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

காவாங்கரையைச் சேர்ந்த யாஸ்மின்(28). யாஸ்மினுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். இதையடுத்து யாஸ்மின் கர்ப்பமடைந்துள்ளார். யாஸ்மினுக்கு அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். யாஸ்மினுக்கு மூச்சு கோளாறு பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஜெயகீதா என்பவர் யாஸ்மினுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

பின்னர், குழந்தையைக் கலைப்பது குறித்து ஜெயகீதாவிடம் யாஸ்மின் கேட்டுள்ளார். இதற்கு அவர் கருவைக் கலைக்க வேண்டாம். குழந்தை பிறந்த உடன் அதை அதிக விலைக்கு விற்று விடலாம் என கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு கடந்த 21ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஜெயகீதா இரண்டு நபர்களை அழைத்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு யாஸ்மினிடம் பணத்தைக் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பணத்தை வாங்கிக் கொண்டு, தனது மகளுடன் யாஸ்மினா சென்றபோதுதான், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அந்த பணப்பையைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மின் குழந்தையை வாங்கியவர்களே தன்னை நோட்டமிட்டு பணத்தை பறித்து சென்றதாகவும், தனது குழந்தையை மீட்டு தருமாறும் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஜெயகீதா வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த திருவள்ளூரைச் சேர்ந்த சண்முகம் (எ) செண்பகம் (39) என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.