லாட்ஜில் ரூம் போட்டு தங்கி வழிப்பறி : பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கைது !!

திருவாடானை அருகே தனியார் லாட்ஜில் தங்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 16 வயது சிறுவன் உட்பட 9 கொள்ளையர்கள் கைது.

லாட்ஜில் ரூம் போட்டு தங்கி வழிப்பறி : பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கைது !!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் சந்தேகப்படும் வகையில் 9 பேர் தங்கியிருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த இருந்த 9 பேரையும், சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். 

அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி பகுதியிலிருந்து இராமநாதபுரத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒரு காரில்  வந்ததாகவும், அதனால் லாட்ஜில் அறை எடுத்து தங்கியதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அந்த 9 பேரும் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான மங்கலம் பகுதியைச் சேர்ந்த பூமி, மாத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் பெரிய உஞ்சனையைச் சேர்ந்த விஸ்வநாதன், மாத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ், இலுப்பக்குடி பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார், சிவனேஷ் மற்றும் 16 வயது சிறுவன் என்பது  தெரிய வந்தது.

ஒரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தொண்டியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி அந்தப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 9 பேரையும் கைது செய்து வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய அரிவாள்கள், கத்திகள் மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் கைது செய்யப்பட்ட பூமி உட்பட 4 பேர் மீது காரைக்குடி, சாக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.