ஊரில் உள்ள பெண்களிடம் தகாத உறவு... வாலிபரை அடித்தே கொன்ற ஊராட்சிமன்றத்தலைவரின் மகன்...

பரமக்குடி அருகே தகாத உறவால் இளைஞர்  அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஊரில் உள்ள பெண்களிடம் தகாத உறவு... வாலிபரை அடித்தே கொன்ற ஊராட்சிமன்றத்தலைவரின் மகன்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். திருநாவுக்கரசுக்கு அந்தப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் தகாத உறவு வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் உறவுக்கார பெண் வெளியூரிலிருந்து உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கிளியூர் வந்துள்ளார். அங்கு வந்த அவரிடம் திருநாவுக்கரசு பேசி பழகி உள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனை அறிந்த  முத்துப்பாண்டி திருநாவுக்கரசை அழைத்து கண்டித்துள்ளார். இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன் என திருநாவுக்கரசு முத்துப்பாண்டியிடம்  கூறியுள்ளார். இந்நிலையில் கொளுவூர் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் நெருங்கிய உறவினருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கொளுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஜீவானந்தம் திருநாவுக்கரசு மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளியூரை  சேர்ந்த முத்து பாண்டியை கொளுவூரைச் சேர்ந்த ஜீவானந்தமமும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவரும் திருநாவுக்கரசின் நடவடிக்கை சரியில்லை என்றும் அவனை ஏதாவது செய்ய வேண்டுமென விவாதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1 -ம்தேதி வயல்வெளியில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசை ஜீவானந்தம் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கம்பால் அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நயினார் கோயில் போலீசார் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த திருநாவுக்கரசின் உறவினர்கள் மற்றும் கிளியூர் கிராமத்தினர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு உடலை வாங்கி  சென்றனர்.

இந்நிலையில்தான் இன்று திருநாவுக்கரசை கொலை செய்த கிளியூரை  சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கொளுவூரை சேர்ந்த ஜீவானந்தம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தங்களின் உறவுகார பெண்களிடம் திருநாவுக்கரசு தகாத உறவு வைத்திருந்ததால் தான் அவரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் திருநாவுக்கரசு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.