செல்போனில் மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவான ஆசிரியர் கைது...

புதுக்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

செல்போனில் மாணவிக்கு பாலியல் தொல்லை...  தலைமறைவான ஆசிரியர் கைது...

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதி அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தமது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பான தொலைபேசி உரையாடலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சண்முகநாதன் பணியிட நீக்கம் செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்து தலைமறைவான ஆசிரியரை இன்று அதிகாலை காவல்துறையினர் அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

அப்போது தமக்கு நெஞ்சு வலிப்பதாக சண்முகநாதன் கூறியதையடுத்து, போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சண்முகநாதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.