பப்புக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை...!  அதிரடியாக கைது செய்த போலீசார்...!

பப்புக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை...! அதிரடியாக கைது செய்த போலீசார்...!

Published on

ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் சாலைகளில் உள்ள பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

சென்னை அடையாறு திரு.வி.க பாலம் அருகே அபிராமபுரம் போலீசார், நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவரை மடக்கி விசாரணை நடத்தினர். அவரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்த காரணத்தினால், போலீசார் அவரிடம் இருந்த பையை  சோதனையிட்டனர். அப்போது அதில் 150 அட்டைகளில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

பின்னர் போதை மாத்திரைகள் குறித்து கேட்டபோது இளைஞர் சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருப்பதாக மழுப்பியுள்ளார். தொடர்ந்து அவரை  அபிராமபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் ஆழ்வார்பேட்டை, பீமன்னா கார்டன் பகுதியைச் சேர்ந்த கோகுல் (எ) மதன் என்பதும், ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளில் உள்ள பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே  போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பான மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதனை கைது செய்த போலீசார் அவனிடம் வாக்குமூலம் பெற்று அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com