குட்டி யானையில் ரேஷன் அரிசி கடத்தல்!!!

குட்டி யானையில் ரேஷன் அரிசி கடத்தல்!!!

திட்டக்குடி அருகே, குட்டி யானையை சோதனை செய்ததில், போலீசார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள, இடைச்செருவாய் பகுதியில் திட்டக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, அந்த வழியாக வந்த வாகனங்களை எப்போதும் போல சோதனை செய்து வந்தனர். பின், அங்கு வந்த ஒரு குட்டி யானையை மறித்து சோதனை செய்ததில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரு டன் அரிசி கிடைத்துள்ளது. அதிலும், அது ரேஷன் அரிசி என்பதும், அது கடத்தி செல்லப்படுவதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

பின்னர், அவர்களிடம் இருந்து 50 கிலோ எடை அளவு உள்ள, 20 மூட்டைகளில் வைத்திருந்த, ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் பிடித்து, குடிமை பொருள் கடத்தல் குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.