குறைந்த விலையில் சொகுசு கார்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி.!!

சென்னையில் குறைந்த விலையில் சொகுசு கார்களை வாங்கி தருவதாக கூறி சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

குறைந்த விலையில் சொகுசு கார்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி.!!

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன், இவர் அப்பகுதியில், பாரத் பெங்களூரு புட்பால் கிளப் என்கின்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.  தனது டிரஸ்ட் மூலமாக குறைந்த விலையில் டொயோட்டா கம்பெனி கார்களை வாங்கி தருவதாக குமாரவேல் என்பவரிடம் நவீன் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய குமாரவேல் மற்றும் அவரது நண்பர்கள் மொத்தம் 19 பேர் கார்களை வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக 2. 15 கோடி ரூபாய் பணத்தை நவீன் வங்கி கணக்கிற்கு குமாரவேல் மற்றும் அவரது நண்பர்கள் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு நவீன் தெரிவித்தபடி கார்களை வாங்கி தராமலும் பணத்தை திரும்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த குமாரவேல் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த நவீனை கைது செய்து பின்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.