குஜராத்தில் வளர்ச்சி திட்டங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் கெவாடியாவில் 160 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளாா். 

2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் சென்ற பிரதமா் மோடி மக்சேனாவில் 5 ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடா்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவா், இந்தியாவின் வளர்ச்சியால் உலக மக்கள் வியப்பதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடா்ந்து கெவாடியாவில் இன்று நடைபெறவுள்ள தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் பிரதமா் மோடி தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் பார்வையிடுகிறார். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பல்வேறு மாநில காவல்துறையின் அணிவகுப்பு பிரிவுகள் பங்கேற்கும். 
 
தொடா்ந்து அங்கு 160 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏக்தா நகரில் இருந்து அகமதாபாத் வரையிலான பாரம்பரிய ரயில் சேவை தொடர்பான திட்டமும் இதில் அடங்கும். நர்மதா ஆரத்திக்கான திட்டம், கமலம் பூங்கா, குஜராத் மாநில கூட்டுறவு வங்கியின் ‘சகர் பவன்‘ உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா். மேலும், கெவாடியாவில் அவசர சிகிச்சை மையத்துடன் கூடிய துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் சூரிய மின் சக்தித் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
 
மேலும் ஆரம்ப் 5.0-ன் நிறைவு விழாவில், 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயிற்சி அலுவலர்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார். 

இதையும் படிக்க: "கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!