ரூ.12 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த பாதிரியார்.. ரூ.1 கோடி மட்டும் கொடுத்து அபகரித்ததாக புகார்!!

சென்னை ஓட்டேரியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாதிரியார் ஒரு கோடி ரூபாய் மட்டும் கொடுத்து மொத்தமாக அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.12 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த பாதிரியார்.. ரூ.1 கோடி மட்டும் கொடுத்து அபகரித்ததாக புகார்!!

ஓட்டேரியைச் சேர்ந்த தனசேகரன், ராஜலட்சுமி, சரண்யா ஆகியோருக்குச் சொந்தமான 8 ஆயிரத்து 63 சதுரஅடி நிலத்தை பாதிரியார் ஜான் வெங்கடேசன் விலை பேசினார்.

தேவாலய கொட்டகை கட்ட வேண்டும் எனக்கூறி முதலில் ஆயிரம் சதுர அடி மட்டும் வாங்குவதாக தெரிவித்த நிலையில், பின்னர் மொத்த நிலத்தையும் வாங்குகிறேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பணமாக 1 கோடி ரூபாய் கொடுத்து விட்டு மீத பணத்தை தருவதாகக் கூறி நிலத்தை அபகரித்து விட்டு அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புளியந்தோப்பு காவல்நிலையம் மற்றும் துணை ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவு, சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்களை வைத்து பாதிரியார் மிரட்டுவதாக கூறப்படுவதை அடுத்து, புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிரியார் ஜான் வெங்கடேசனிடம் இதுகுறித்து கேட்டபோது, எதுவும் பேச விரும்பவில்லை, எதுவாக இருந்தாலும் புளியந்தோப்பு காவல் நிலையத்தை அணுகுங்கள் என பதிலளித்துள்ளார்.