டிப்டாப்பா..வந்தா விட்டுருவோமா...ஜெராக்ஸ் எடுப்பதுபோல் செல்போனை லாவகமாக திருடிய பலே திருடன்!

தாம்பரத்தில் டிப்டாப் ஆசாமி  கண்ணிமைக்கும் நேரத்தில்  விலை உயர்ந்த செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிப்டாப்பா..வந்தா விட்டுருவோமா...ஜெராக்ஸ் எடுப்பதுபோல் செல்போனை லாவகமாக திருடிய பலே திருடன்!

சென்னை பல்லாவரம் அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீரா. இவர் தாம்பரம் சி.டி.ஒ காலனி பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகின்றார். 

ஜெராக்ஸ் கடைக்கு டிப்டாப்பாக உடை அணிந்த ஆசாமி ஒருவர் வந்து ஜெராக்ஸ் எடுத்து விட்டு அவசரஅவசரமாக இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.

அதன் பிறகு மீரா கடையில் உள்ள மேசையின் மீது வைத்திருந்த செல்போனை எடுக்க சென்ற போது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, ஜெராக்ஸ் எடுப்பதற்காக உள்ளே வந்த டிப்டாப் ஆசாமி மேஜையின் மீது வைத்திருந்த விலை உயர்ந்த செல் போனை லாவகமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அதன்பிறகு சிசிடிவி காட்சிகளுடன் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளையும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து டிப்டாப்பாக வந்து செல்போன் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் பட்டப்பகலில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது, இனியாவது திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?