வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் தந்தை, மகன் செய்த செயல் : சினிமா பாணியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் !!

சங்கராபுரம் அருகே கடன் வாங்கிய பெண் திருப்பி கொடுக்காததால் பெண்ணின் தாயைக் கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் தந்தை, மகன் செய்த செயல் : சினிமா பாணியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது புதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள சுடுகாட்டில் சம்பவத்தன்று பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், யாரையோ கொன்று அங்கு புதைத்திருப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் சந்தேகத்துக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்தனர்.

இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் மீண்டும் இந்த பள்ளத்தில் புதைக்கப்பட்டது தொடர்ந்து அந்தப் பெண் யார்? அவரை கொலை செய்து வைத்தது யார்? காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ஆண்டாள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுதொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மற்றும் இவரது மகன் விக்னேஷ் இவர்கள் இருவரும் ஆண்டாள் கொலை செய்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம் சரணடைந்தனர். தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கீழ்க்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஆண்டாளின் மகள் தனலட்சுமி அரிசி வியாபாரம் செய்து வந்தார். அதில் அரிசி வாங்கி வியாபாரம் செய்ய  15 லட்சம் ரூபாய் வீராசாமி கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதனையடுத்து தான் கொடுத்த பணத்தை 15 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் வீராசாமி  ஆனால் பணத்தை வாங்கிய தனலட்சுமி பணத்தை திருப்பித் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். 

சம்பவத்தன்று தனலட்சுமியை தேடி அவரது வீட்டிற்கு வீராசாமியும் அவரது மகனும் விக்னேஷ்சும் சென்றனர். ஆனால் தனலட்சுமி அங்கு இல்லை வீட்டில் ஆண்டாள் மட்டுமே இருந்தார். உங்களது மகள் என்னுடைய பணத்தை 15 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். பணம் திருப்பிக் கொடுக்கும் வரை நீ எங்கள் வீட்டுக்கு வந்துவிடு அப்படி என்றால் உன்னை தேடி உன் மகள் என் வீட்டுக்கு வருவாள். அப்போது அவளிடம் எங்களுடைய பணத்தை வாங்கி கொள்கிறோம் என கூறி ஆண்டாளை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர்.

இருப்பினும் பத்து நாட்கள் ஆகியும் தாய் ஆண்டாளை தேடி மகள் தனலட்சுமி செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வீராசாமி, விக்னேஷ் இருவரும் சேர்ந்து ஆண்டாளை தாக்கியதோடு, சேலையால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து, கொலையை மறைக்க ஆண்டாளின் உடலை சாக்குமூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் புதூர் சுடுகாட்டிற்கு கொண்டு குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததால், எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர்கள் சரண் அடைந்தனர்.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.