ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ரூ.14 லட்சத்துக்கு ஏலம்...

உள்ளாட்சி தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி லட்சக் கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டு வருவது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ஊராட்சிமன்றத் தலைவர் பதவி  ரூ.14 லட்சத்துக்கு ஏலம்...

உள்ளாட்சி தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி லட்சக் கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டு வருவது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஒன்பது மாவட்டங்களிலும் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம், அக்கிராம மாரியம்மன் கோயில் எதிரிலுள்ள ஆலமரத்தடியில் நடைபெற்றது. லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கிய ஏலத்தை, வெள்ளேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த   சற்குணம் என்பவர் 14 லட்சத்திற்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,அக்கிராம இளைஞர்கள் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் பதவி நேற்று 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, இன்று அரங்கேறியுள்ள இந்நிகழ்வு, பரபரப்பை அதிகரித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும்நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், எவ்வித அச்சமுமின்றி உலா வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.