புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி திருடிச்சென்ற பலே காதல் ஜோடி..! 3 மாதம் தண்ணி காட்டி வந்தவர்கள் ...அதிரடியாக கைது!!

சேலத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி அதனை திருடிச்சென்ற பலே காதல் ஜோடியை கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி திருடிச்சென்ற பலே காதல் ஜோடி..! 3 மாதம் தண்ணி காட்டி வந்தவர்கள் ...அதிரடியாக கைது!!

கர்நாடகா மாநிலம், பங்காருப்பேட்டை அருகே, காரென்னஹள்ளியை சேர்ந்தவர் பிரவீண். இவர், சேலம், காந்தி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்தார். அப்போது அதே ஓட்டலில் பணிபுரிந்த பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ப்ரீத்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இதற்கிடையே பிரவீணும், ப்ரீத்தியும், ப்ரீத்தியின் சகோதரி சோனியும், அவரது தோழர் அரவிந்த் ஆகியோர் கடந்த ஜனவரி 21-ம் தேதி தாதுபாய்குட்டையில் உள்ள ஷோரூமுக்கு சென்றனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 'புல்லட்' வாகனத்தை வாங்குவது போல் ஏமாற்றி விலை பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில், ஓட்டிப்பார்ப்பதாக கூறி பிரவீணும், அவரது காதலியும் எடுத்துச்சென்றவர்கள், மீண்டும் கடைக்கு வரவில்லை. மற்ற இருவரும், அவர்களை தெரியாது எனக்கூறினர். 

இதனால், கடை உரிமையாளர் ராம்பாலாஜி அளித்த புகாரின்படி, டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, தனிப்படை போலீசார் விசாரித்ததில், கர்நாடகா, காரென்னஹள்ளியில் காதலர்கள் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற போலீசார், 3 மாதங்களாக  தண்ணி காட்டி வந்த புல்லட் காதல் ஜோடிகளை அதிரடியாக கைது செய்தனர்.