25 சவரன் நகையை ஆட்டைய போட்ட மர்மநபர்கள்!! கொள்ளையடித்ததோடு வீட்டிற்கும் தீ வைப்பு...

திண்டுக்கல் அருகே 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தடயங்களை மறைப்பதற்காக வீட்டை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 சவரன் நகையை ஆட்டைய போட்ட மர்மநபர்கள்!! கொள்ளையடித்ததோடு வீட்டிற்கும் தீ வைப்பு...

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் வசித்து வரும் மணிமாறன் தலைமை தபால் நிலையத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று சொந்த வேலையாக குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்டு இருந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பூஜையறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துள்ளனர். மேலும், கொள்ளையர்கள் தடயங்களை மறைப்பதற்காக வீட்டை கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, நள்ளிரவில் மணிமாறன் வீட்டிலிருந்து புகை வந்ததைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதலில் தீ விபத்து என நினைத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்துவிட்டு மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தான் வீட்டின் பூட்டுகள் மற்றும் பீரோ கதவுகள் உடைக்க பட்டிருப்பதும் வீட்டில் உள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

மேலும், தடயங்களை மறைப்பதற்காக  பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையடித்ததோடு வீட்டிற்கும்  தீ வைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.