மூன்று நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை...2 கோடி மதிப்பிலான தங்க வைர, நகைகள் கொள்ளை

கோவை துடியலூர் பகுதியில் மூன்று நாட்களில் 7 வீடுகளில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டசம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை...2 கோடி மதிப்பிலான தங்க வைர, நகைகள் கொள்ளை

கோவை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளான மதுக்கரை,துடியலூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக பல்வெறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆட்கள் உள்ள வீடுகளையும், ஆட்கள் இல்லாத  வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகும் கொள்ளையர்கள் அங்கிருக்கும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். குறிப்பாக துடியலூர் பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அதன்படி கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கவுண்டர் மில்ஸ் பகுதியில்  தொழிலதிபர் சீனிவாசன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 1.27 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 2.50 லட்சம்  மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் அருகிலுள்ள சிங்காரவேலன் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அதனைதொடர்ந்து அதே பகுதியில்  உள்ள சுப்பிரமணியம், சண்முகம் ,வேலுமணி , தினேஷ்குமார், ஆகியோர் வீட்டிலும் புகுந்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துடியலூர் வடமதுரை பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் கரிகாலன் என்பவரது, வீட்டில் அதே கொள்ளையர்கள் 50 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களாக கூறப்படுகிறது.  ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதியில் மூன்று நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ,வைர  நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படை மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டும் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

துடியலூர் பகுதி மட்டுமல்லாமல் மதுக்கரை, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறும் சமூக ஆர்வலர்கள். கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் ஏராளமான விழிப்புணர்வு மீம்ஸ்சுகளை  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் சூழலில் விழிப்புணர்வு மீம்ஸ்   உருவாக்குவதைக் காட்டிலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களை கண்டறிவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டுமென வலியுறுத்தினர்