மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் மர்ம கும்பல்..! அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்..!

போதை மாத்திரைகளுக்காக மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த நான்கு இளைஞர்கள் கைது...!

மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் மர்ம கும்பல்..! அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்..!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கடந்த 20 - ஆம் தேதி துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியில் தனசேகர் என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா மெடிக்கல் என்ற மருந்தகத்தில் இரண்டு பேர் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 40 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். இதேபோல் பெருங்குடி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மணிகண்டன்(31) என்வருக்கு சொந்தமான ஓகே மருந்தகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு நள்ளிரவில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் மருந்தக உரிமையாளர் புகார் அளித்திருந்தார். 

இருவேறு இடங்களில் மருந்தகத்தை குறிவைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து மருந்தகத்தின் உரிமையாளர்கள் துரைப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதியிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் தொடர்ந்து மருந்தகங்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி வருவதால் ஆய்வாளர் தலைமையில் உதவியாளர் மனோகரன், தலைமை காவலர்கள் புஷ்பராஜ், பார்த்தசாரதி, உதயகுமார், கர்ணா ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு அமைத்து மருந்தகங்களை கொள்ளையடிக்கும் கும்பலை தேடி வந்தனர். 

மருந்தகங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகளை கைபற்றிய தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்த நிலையில் ஏற்கனவே பல குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ள நான்கு பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எட்டு அடுக்கு பகுதியை சேர்ந்த சூர்யா விக்ரம் (எ) மெக்கானிக் சூர்யா, திருநின்றவூர் நிமிலிச்சேரியை சேர்ந்த மோகன்(எ) கௌதம்(19) , கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த அருண் (26) , கண்ணகிநகர் பகுதித்தை சேர்ந்த சுஜன் (21) என்பது தெரியவந்துள்ளது. 

இந்த நால்வர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர்கள் போதை மாத்திரைகளை தேடி மருந்தகங்களை குறிவைத்து கொள்ளையடிப்பதும், போதை மாத்திரைகள் இல்லாத மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் கடந்த 20 - ஆம் தேதி குமரன் குடில் பகுதியில் உள்ள கிருஷ்ணன் மெடிக்கல் என்ற மருந்தகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  40 ஆயிரம் ரூபாயை பெண்களிடம் உல்லாசமாக இருக்க செலவழித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

அதேபோல் பெருங்குடியில் உள்ள மருந்தகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற இருவர் கையில் டார்ச் அடித்துக்கொண்டு போதை மாத்திரை என நினைத்து சளிக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைதான 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனம், திருட்டுக்கு பயன்படுத்திய கௌபார், பட்டா கத்தி உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் போதை மாத்திரைகளை இளைஞர்களிடம் விற்பனை செய்து மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்கும் கும்பலை துரிதமாக கைது செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி தலைமையிலான  தனிப்படையினரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.