பூட்டிய ஆலையில் இருந்து தாது மணல் கடத்தல் - வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு!  

தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து சட்டவிரோதமாக தாது மணல் எடுத்துச் சென்றது தொடர்பாக, விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூட்டிய ஆலையில் இருந்து தாது மணல் கடத்தல் - வைகுண்டராஜன் மீது வழக்குப்பதிவு!   
Published on
Updated on
2 min read

தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து சட்டவிரோதமாக தாது மணல் எடுத்துச் சென்றது தொடர்பாக, விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாது மணலை பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2017-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டதில், கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது மணல்கள் மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 981 டன் இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, 19 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 15 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வி.வி. டைட்டானியம் பிக்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, தாது மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், லாரியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 டன் தாது மணலையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தாசில்தார் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், விவி டைட்டானியம் பிக்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் வைகுண்டராஜன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட ஆலையில் இருந்து தாதுமணலை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீல் வைக்கப்பட்ட கிடங்குகளில் மீண்டும் சோதனை நடத்தி, ஏற்கனவே இருந்த கையிருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஓருங்கிணைப்பாளர் வேல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com