மனநலம் சரியில்லாதவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு பலி :  சிசிடிவி காட்சியால் ஒருவர் கைது !!

பாலக்காட்டில் கிரிக்கெட் மட்டையால் அடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மனநோயாளி பலி.சிசிடிவி காட்சிகள் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மனநலம் சரியில்லாதவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு பலி :  சிசிடிவி காட்சியால் ஒருவர் கைது !!

கேரள மாநிலம் பாலக்காடு, நரிக்குத்தி என்னும் பகுதியில் நேற்றைய தினம் விக்டோரியா கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி பகுதியில் சுற்றி திரிந்த ஒருவரை, திடீரென பைக்கில் வந்த இருவரில் ஒருவர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும் அந்த நபர் திடீரென கீழே  சரிந்து விழுந்துள்ளார்.

உடனே கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் அருகிலிருந்த ஆட்டோவை அழைத்து பாலக்காடு தாலுக்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் வாகன விபத்து ஏற்பட்டு உள்ளது என பொய் கூறி மயக்க நிலையில் இருந்த நபரை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் இந்தப் பகுதிகளில் எந்த வாகன விபத்தும் நடக்கவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் இரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பாலக்காடு வடக்கு போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதில் பைக்கில் வந்த இருவர் மன நோயாளியான புதுப்பள்ளி பகுதியை சார்ந்த அனஸ் என்பவரை கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கிரிக்கெட் மட்டையால் தாக்கியவர் நரிக்குத்தி பகுதியை சார்ந்த ஃபெரோஸ்  என்பதும் தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து  உடனடியாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மனநோயாளி என்பது தங்களுக்கு தெரியாது, மாணவிகள் விடுதி பக்கமாக நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததால் பயமுறுத்த வேண்டும் என்றுதான் கை, கால்களில் அடிற்பதற்கு பதிலாக அடி தவறுதலாக அவரது தலையில் பட்டு கீழே விழுந்து மயங்கி விட்டார் என்றும் உடனே தாங்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், தன்னுடன் பைக்கில் வந்த இன்னொருவர் கேரளா போலீசில் வேலை செய்யும் காவலர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. 

ஃபெரோஸ் உடன் வந்த இன்னொரு நபர் காவலர் என்பதால் அவரை குறித்த எந்த தகவலும் இதுவரையிலும் போலீசாரால் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் மனநோயாளி அனஸை கிரிக்கெட் மட்டையால் பயங்கரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.