கொள்ளை அடிக்க யூடியூப் கைகொடுக்குமா?.. திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடிகள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

கொள்ளை அடிக்க யூடியூப் கைகொடுக்குமா?.. திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடிகள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே முதியவரைக் கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட காதல் ஜோடியைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் தனியாக வசிக்கும் வயதான் தம்பதி:

வடவள்ளி அருகே பொம்மணாம்பாளையம் பகுதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் - ராஜம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மகள் திருமணமாகி பெரிநாயக்கன்பாளையம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். அதனால், வயதான தம்பதிகள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவ நாளன்று மூதாட்டி மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், ராயப்பன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

முதியவரிடம் தண்ணீர் கேட்ட காதல் ஜோடிகள்:

முதியவரான ராயப்பன் தனியாக இருப்பதை நோட்டமிட்ட காதல் ஜோடிகள், சுமார் 2 மணியளவில் ராயப்பனிடம் தண்ணீர் கேட்டு உள்ளனர். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது நன்மை என்று எண்ணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற இருவரும் அவரை மடக்கி பிடித்து இருகைகளையும் கட்டி , வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர்.

சரியான நேரத்தில் எண்ட்ரீ கொடுத்த மருமகள்:

அதை தொடர்ந்து, வீட்டை உலா வந்த ஜோடிகள், பீரோ மற்றும் பல இடங்களில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை சுருட்டி விட்டு வீட்டின் பின் வழியாக தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து, வீட்டிற்கு வந்த மருமகள், யார் அது? வீட்டின் பின்புறத்தில் இருந்து வருகிறார் என சந்தேகப்பட்டு, அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டுள்ளார்.

ஊர் மக்களிடம் மாட்டிக்கொண்ட காதல் ஜோடிகள்:

இது என்ன சோதனையா இருக்கு என நினைத்து கொண்டிருந்த ஜோடிகள்.. மருமகள் சங்கீதாவிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து நழுவ முற்பட்டு உள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சங்கீதா அவர்களை பிடிக்க முற்பட்டு உள்ளார். ஆனால், அவர்கல் சங்கீதாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். தொடர்ந்து, சங்கீதாவின் கூச்சல் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் விரட்டி பிடித்தனர். 

தர்ம அடி:

காதல் ஜோடிகளை விரட்டி பிடித்த ஊர்மக்கள், இருவருக்கும் சரியான தர்ம அடி கொடுத்தனர். பின்னர், திருட்டில் ஈடுபட்டது குறித்து வடவள்ளி காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணை:

போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த சென்பகவள்ளி என்பதும், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்து உள்ளனர்.  நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சொகுசு வாழ்க்கை வாழவும் , பல இடங்களுக்கு சுற்றவும் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் இவர்கள் கிராம பகுதியை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்து குறிப்பிட்ட வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்து வந்து உள்ளனர்.

யூடியூபை பயன்படுத்தி கொள்ளை:

அதுமட்டுமல்லாமல், இவர்கள் இருவரும்  யூடியூபை பார்த்து கொள்ளை அடிப்பதற்காக சுத்தி ,கயிறு ,பிளாஸ்டர் , உலி , திருப்புலி போன்று சில ஆயுதங்களை வைத்து கொள்ளை அடித்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக பொம்மணம்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்துள்ள பெரிய ராயப்பன்‌ வீட்டை ஒரு வாரத்திற்கு முன்பாக திருட குறி வைத்து இருந்தது தெரியவந்து உள்ளது.

சந்தேகம்:

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனம், இரண்டுக்கும் மேற்பட்ட நம்பர் பிளேட் மற்றும் கூர்மையான ஆயுதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாநகர்‌ பகுதியில் இது போன்ற திருட்டு சம்பவத்தில் இவர்கள் இருவரும்  ஈடுபட்டு உள்ளனரா ?  என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.