உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் பணம்...! வீண் வாக்குவாதத்தால் சிக்கிய சம்பவம்...!

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் பணம்...! வீண் வாக்குவாதத்தால் சிக்கிய சம்பவம்...!

கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்த கரூரை சேர்ந்த நபரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் பணத்துடன் அந்த நபரை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பேருந்தில் தான் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். நடத்துனர் குமாரை பைக்கான டிக்கெட் எடுக்ககோரி  வலியுறுத்தியுள்ளார். ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துனருக்கும் குமாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து நடத்துனர் பேருந்தை, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்ததையடுத்து விசாரணை நடத்திய காட்டூர் போலீசார், சந்தேகத்திற்கிடமான பையை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து  போலீசார் பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் 80 லட்ச ரூபாய் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரிடம், பைனான்ஸ் வழங்குவதற்காக வைத்திருந்த பணம் என்று குமார் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 80 லட்ச ரூபாய் பணம் மற்றும் அதனை கொண்டு வந்த குமார் என்ற நபரை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்கள் காண்பிக்காத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்படுவார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : "பெரியார் தாத்தா" குழந்தைகள் கையில் தவழும் பெரியார்...!