டீ, பன்னுக்கு ஆசைப்பட்டு நகையை பறிகொடுத்த மூதாட்டி... 

ஒரு டீ, பன்னுக்கு ஆசைப்பட்டு தான் அணிந்திருந்த நகையை பறிகொடுத்த மூதாட்டி.

டீ, பன்னுக்கு ஆசைப்பட்டு நகையை பறிகொடுத்த மூதாட்டி... 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம் பட்டியை சேர்ந்தவர் மீனம்மாள். இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். நேற்று மாலை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக குன்னம் பட்டியிலிருந்து வேடசந்தூர் செல்லும் சாலைக்கு நடந்து வந்துள்ளார். அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கணவனும், மனைவியும் தம்பதியர்களாக வந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் ஒரு மூதாட்டி காதில் அரை பவுன் தோடு மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட மூக்குத்தி அணிந்திருந்ததை கண்டுள்ளனர்.

இதைக்கண்ட திருட்டு தம்பதியினர் அந்த மூதாட்டியிடம் லாவகமாக பேச்சு கொடுத்துள்ளனர். இதனை அறியாத அந்த மூதாட்டி நான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாக கூறியுள்ளார். உடனே அந்த தம்பதியினர், நாங்களும் அதற்காக தான் செல்கிறோம், எங்களுடன் வாருங்கள் என்று அவர்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, வேடசந்தூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனியார் நூற்பாலை அருகே சென்றுள்ளனர்.

அங்கு ஒரு டீக்கடையில் அந்த மூதாட்டிக்கு டீ மற்றும் பன் வாங்கி கொடுத்துள்ளனர். பன்னில் மயக்க மருந்து கலந்து அந்த மூதாட்டிக்கு கொடுத்துள்ளனர். அதனை அறியாத மூதாட்டி பன்னை சாப்பிட்டுள்ளார். மயக்க மருந்து கலந்த பன்னை சாப்பிட்ட மூதாட்டி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

பின்பு மூதாட்டி அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலையும், கால் பவுன் தங்க மூக்குத்தியையும் அபகரித்துக் கொண்டு தப்பியுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்பு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மூதாட்டியிடமிருந்து நகையை பறித்து கொண்டு சென்றது யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வேடசந்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.